ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷ சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் 14.08.2024 முற்பகல் கட்டுப்பணம் செலுத்தினார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்சியால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியில் உள்ள பலரது நிலைப்பாடாக இருந்தது.
கட்சி தமக்கு வேட்புமனுவை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தகர் தம்மிக்க பெரேரா முன்னர் தெரிவித்தார்.
ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி செய்திகள் வெளியாகின.
இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவின் பெயர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.