கொழும்பு தலைநகரில் தமிழ் கவிஞர்களின் தேசிய அமைப்பாக விளங்கும் வகவம் எனும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் வலம்புரி கவிதா வட்டம் ஒவ்வொரு பௌர்ணமி தின காலையிலும் தனது கவியரங்கினை தொடர்ச்சியாக நடாத்தி வருகிறது. மேடையில் வந்து கவிதை பாடும் கவிஞர்களின் களமாக இது விளங்கி வருகிறது. சர்வதேச புகழ் பெற்ற கவிஞர்களிலிருந்து புதிய கவிஞர்கள் வரை பலருக்கு இது மேடை கொடுத்து வருகிறது. 1981 ல் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பு இது. நாட்டில் ஏற்பட்ட பல சிக்கலான சூழல் காரணமாக சில காலங்கள் தடைபட்டிருந்த அமைப்பு மீண்டும் 2013 ல் புத்துயிர் பெற்றது.
ஒவ்வொரு மாதமும் ஒரு கவிஞருக்கு கவியரங்கைத் தலைமையேற்று நடாத்தும் வாய்ப்பினை வழங்கிவரும் வகவம் இம்மாத பௌர்ணமி தினத்தில் இடம்பெற்ற தனது 92 ஆவது கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்தும் வாய்ப்பினை கவிஞர் ந. தாமரைச் செல்விக்கு வழங்கியது. தனது கவித்துவமான வரிகளினால் கவியரங்கிற்கு அவர் உயிரூட்டினார்; சபையினரின் ஒட்டு மொத்த பாராட்டினையும் பெற்றுக் கொண்டார்.
கொழும்பு பழைய நகர மண்டபத்தில் 29/9/2023 அன்று நடந்த நிகழ்வுகளை
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்த, வரவேற்புரையை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்த்த நன்றியுரையை பொருளாளர் ஈழகணேஷ் வழங்கினார்.
தனது சிறுவர் நூலுக்காக இம்முறை பிரதேச சபையின் சாஹித்திய விருதினை பெற்றுக் கொண்ட கவிஞர் வாசுகி பி. வாசுகிக்கு வலம்புரி கவிதா வட்டம் தனது பாராட்டினைத் தெரிவித்தது.
கவிஞர் தாமரைச் செல்வியின் தலைமையில் நடைபெற்ற 92 ஆவது கவியரங்கில் கவிஞர்கள் கிண்ணியா அமீர் அலி, ஆர். தங்கமணி, எம். யூ. கமர்ஜான் பீபி, அட்டாளச்சேனை ரிஸ்லி சம்சாட், இ. கலைநிலா, ராஜா நித்திலன், பதுளை கபிலகன் ஒகஸ்டீன், வாசுகி பி. வாசு, எம். பிரேம்ராஜ், லைலா அக்ஷியா, வதிரி சி. ரவீந்திரன், பவானி சச்சிதானந்தன், ஆர். எஸ். ரஸ்மியா, உணர்ச்சிப் பூக்கள் ஆதில், மலாய்கவி டிவாங்ஸோ, அப்துல் அஸீஸ் ஆகியோர் கவிதை பாடினர்.
ஒவ்வொருவரும் வித்தியாசமான பாணிகளால் கவியரங்கை கலகலப்பாக்கினர். வாசுகி பி. வாசு கவிதையில் கேட்ட கேள்விகளுக்கு அடுத்து வந்த கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ் கவிதையிலேயே பதில் கூறி அசத்தினார். சிறுமி இளங்கோ கலைநிலாவின் “பாப்பாவும் தாத்தாவும்” கவிதை, வதிரி சி. ரவீந்திரன் வழங்கிய “பட்டம்” கவிதை, அப்துல் அஸீஸ், கவிஞர் வைரமுத்துவின் ‘காதலித்துப் பார்’ கவிதையின் சிங்கள மொழி பெயர்ப்பு கவிதை என்பனவும் விசேட கவனத்தை ஈர்த்தது.
சமூகஜோதி ரபீக், மஸீதா அன்சார், சு. ஜெகதீஸ்வரன், நா. ஆனந்தீஸ்வரன், இளங்கோ கவிதா, இளங்கோ தமிழ், எம். பாலசுப்பிரமணியம் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.படங்கள் – முஹம்மத் நசார்