அவர்கள் இருவரும்
மேடையில் உள்ளனர்
நானும் நீயும் என்ன நினைக்கிறோம்
ஒருவரோ டொருவர் பேச மாட்டார்,
பேசினாலும்
கண்ணும் கண்ணும் சந்தியாமலும்
முகத்தைக் கொஞ்சம் சுழித்துக் கொண்டும் தான்
பேசுவர் என்றா
அவை நானும் நீயும் செய்தவைகள்
நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில்
எனது பலூனை நீ ஊசியால் குத்த
உனது கையில் பென்சிலால் குத்தினேன்
பின்னர் நாங்கள் பேசாதிருந்தோம்
மௌலவி ஆசிரியர்
வகுப்புக்கு வந்தார்
இஸ்லாமிய மலரில்
ஓர் உரையாடல் இருந்தது
அதனை இருவரும்
வாசிக்கச் சொன்னார்
முகத்தை நன்றாய் நீட்டிக் கொண்டும்
கண்ணும் கண்ணும் சந்தியாமலும்
அஸ்ஸலாமு அலைக்கும்
என்று நான் சொல்ல
வ அலைக்கு முஸ்ஸலாம்
என்று நீ சொல்லி
எவ்வளவு கெதியாய்
உரையாடி முடித்தோம்.
ஆசிரியர் நம்மை போற்றி மகிழ்ந்தார்
கோபத்தில் கூட நாம்
உண்மையாய் இருந்தோம்
இப்போது நாம் என்ன
நினைக்கிறோம் நண்பா
இவர்களும் கூட அப்படி என்றா
உனது தலைவரும் அவரும் இன்னும்
ஒற்றுமையாகவே உள்ளனர் நண்பா
பண்டாரநாயக்க மெமோரியல் ஹோலிலோ
ஐந்து நட்சத்திர
திருமண விழாவிலோ
பாராளு மன்ற கொரிடோர் களிலோ
மேதகு எங்கள் ஜனாதிபதி* முன்னிலோ
மனம் விட்டு அவர்கள் சிரிக்கின்றார்கள்
அவர்களின் கைவசம்
எல்லாமே உள்ளன
கார்கள் ஜீப் வீடு ரெலிபோன்
வேறு சொகுசுகள்
இன்னும் பற்பல
அவர்கள் இப்போது வேறொரு சமூகம்
அவர்கள் இப்போது வேறொரு குடும்பம்
நீயும் நானும் தான் பேசுவதில்லை
மெளத்துக்கு கூட
வராத அளவுக்கு
கோபத்தில் கூட நாம்
உண்மையாய் இருப்பதால்
அவர்கள் இன்னும்
மேடையில் உள்ளனர்,
நண்பனே
- எச்.ஏ.அஸீஸ்
10 ஓகஸ்ட் 1992