ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் 09.08.2024 நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த 5ம் திகதியுடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது நாளை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம் நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதன்படி, சோஷலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான பாணி சிறிவர்தன கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
அத்துடன், மேலும் 3 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி, இதுவரையில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.