ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளரின் பெயர் 08.08.2024 அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்குத் பொருத்தமான பொதுவேட்பாளர் குறித்து ஆராய்வதற்காகக் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு, தமிழ் பொதுவேட்பாளரின் பெயரை ஓரிரு தினங்களில் அறிவிப்பதற்குத் தீர்மானித்தது.
அன்றைய கூட்டத்தில் நிதி மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்கான உபகுழு உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்கான பொதுவேட்பாளராக நான்கு பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
அவர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.
இந்த நிலையில், தமிழ் பொதுவேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவை வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான அறிவிப்பு 08.08.2024 காலை வெளியிடப்படவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், இன்றைய தினம் தெரிவுசெய்யப்படவுள்ள பொதுவேட்பாளரை இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் சுரேஸ் பிரேமசந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.