ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் 06.08.2024 செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயே இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில், ஹமாஸ் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொள்ளப்பட்ட இஸ்மாயில் ஹனீயே, கட்டாரில் பல ஆண்டுகளாகத் தஞ்சம் அடைந்ததைப் போல் அல்லாமல் யேஹ்யா சின்வர் காஸாவிலேயே வசித்து வந்தார்.
பொதுவெளிகளில் அதிகம் தோன்றாவிட்டாலும் ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருபவராக இவர் அறியப்படுகிறார். ஆனால், இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதிலிருந்து இவர் பொதுவெளியில் தோன்றாதது குறிப்பிடத்தக்கது.