மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா 07.08.2024 மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த 02.08.2024 இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடமையிலிருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்தனர்.
இதனையடுத்து மன்னார் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, வைத்தியரை இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
வைத்தியர் அர்ச்சுனா இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்டிருந்ததுடன், அவரை இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.