( ஐ. ஏ. காதிர் கான் )
“இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு எனது அம்மா சொன்னார். 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவை விட்டுச் செல்ல வேண்டாம் எனக் கூறிய அதே அம்மா தான், இம்முறை ரணிலோடு நிற்குமாறு கூறுகிறார்” என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்டத் தலைவர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
எனவேதான், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்தை, களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக, ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
களுத்துறை மாவட்டத்தில் இன்று (04) காலை, தனது ஆதரவாளர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே, அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் வேலைத் திட்டத்தை, களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். இந்த மாவட்டத்தை வெற்றி பெறச் செய்து காட்டுவோம். கட்சிக்கு எதிராகச் செயற்படுவது, கடினமான காரியம் தான். ஆனால், உங்கள் கோரிக்கையை ஏற்று, அந்த முடிவை நான் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.