( ஐ. ஏ. காதிர் கான் )
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, சுயாதீன தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பது குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிர்வாக மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் மக்கள் கூட்டங்களை நடாத்தி வருகின்றன.
இருப்பினும், எதிர்வரும் 15 ஆம் திகதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெறும் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் அவதானம் செலுத்தி வருகின்றன.
அதேவேளை, தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில், வழமைபோன்று இம்முறையும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தது.
அவ்வழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நிர்வாக மட்ட உடன்படிக்கை (31) புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் தமது தேர்தல் கண்காணிப்புக் குழுவை ஈடுபடுத்தும் செயன்முறையின் முதற்கட்டம் இதுவென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, இந்த ஆரம்பகட்ட உடன்படிக்கையின் அடுத்தகட்டமாக, தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவின் விபரங்கள் வெளியிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.