( ஐ. ஏ. காதிர் கான் )
இதுவரை, ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிச் சிந்திக்காத நாற்பது இலட்சம் மக்கள் இருப்பதாக, அரச புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவு, சமீபத்தில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்போதே இது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“இலங்கையிலுள்ள வாக்காளர்களில் நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு “புள்ளடி” இடுவது என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என, அரச புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ள ஆய்விலிருந்து தெரிய வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அமைவாகத் தெரிவு செய்யப்பட்ட பல பிரதேசங்களில் புலனாய்வுப் பிரிவினால் அண்மையில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அந்தக் கணிப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகளை அளிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த சரியான தீர்மானம், இறுதி சில வாரங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”.
இதேவேளை, “இவ்வாறு தெரிவித்துள்ளவர்களின் விகிதாசாரம் 30 சத வீதமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள தாகவும்” அரச புலனாய்வுப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.
“நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைப்பாடு, வேட்பாளர்களின் பிரபல்யம், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆளுமை” போன்ற காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்பே, குறித்த வேட்பாளரைத் தேர்வு செய்யவிருப்பதாக 30 வீதமானோர் கூறியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை,, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், முதன் முறையாக தமது வாக்குகளை அளிக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தவிர, இளைஞர் யுவதிகளில், சுமார் 20 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும், ஆணைக்குழு வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது..