( ஐ. ஏ. காதிர் கான் )
“எமது ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் இருக்காது. சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும்” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கம்பஹா நகரில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ சிப்பாய்கள் அமைப்பின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே,அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
“ஈ – விசா சேவை தொடர்பாக அமைச்சரவைக் குழு மேற்கொண்ட தீர்மானத்தால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம்.
இந்த மோசடியை, ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்து, அதற்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவையும் பெற்றுள்ளது.
கோப்புகளைக் காட்டிப் பேசும் வாய்ச் சொல் தலைவர்கள், இந்த மோசடி தொடர்பில் மௌனம் சாதிக்கின்றனர். நாட்டின் அடிப்படை உரிமைகளைக் கூட செல்லாத முடிவுகளாகக் கருதும் ஆட்சியொன்றே தற்போது காணப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கலைத் தவிர்த்து, சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும்” என்றார்.