ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளுக்காக 50,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை முன்னதாகவே கணக்கிடப்பட்டு வருவதாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்வது உள்ளிட்ட தேர்தல் கடமைகளுக்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச அதிகாரத்தை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.