சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம்(03.08.2024) அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
03.08.2024 முற்பகல் 9 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(06.08.2024) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் வரையில் 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து 8 வேட்பாளர்களும் சுயாதீனமாகப் போட்டியிடவுள்ள 5 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.