வழி இலக்கும் 138 கடவத்தை- புறக்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் 31.07.2024 காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
அதன்படி, கடவத்தை – புறக்கோட்டை, வெலிவேரிய – புறக்கோட்டை மற்றும் கிரில்லவல – புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை.
பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேருந்துகள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிரிபத்கொட-புறக்கோட்டை மார்க்கத்தில் புதிய பேருந்துகள் பலவற்றிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் தமது வருமானத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 138 பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடவத்தை – புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்தில் அதிகளவான சகதி குழிகள் காணப்படுவதால் பேருந்துகள் பழுதாகி வருவதாக தெரிவிக்கும் பேருந்து சாரதிகள், கழிவறைகள் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு தீர்வு காணுமாறு கோரியே தாம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் பேருந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த பேருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக அவ்வழியாக பயணிக்கும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.