அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து, 29.07.2024 நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகினர்.
பீட்ரு தோட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்குள் கடந்த மே மாதம் 30ஆம் திகதி அத்துமீறிப் பிரவேசித்து, களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் அதிகாரிகளை சில மணி நேரம் தடுத்து வைத்திருந்ததாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நுவரெலியா மாவட்ட நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு அடுத்த மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படவிருந்த நிலையில், இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
எனினும் குறித்த வழக்கு தொடர்பில், காவல்துறையினால் சந்தேக நபர்கள் இன்னும் பெயரிடப்படாமையினால், விசாரணை தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 26ஆம் திகதி மன்றில் முன்வைக்குமாறு நுவரெலிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.