ஜனாதிபதித் தேர்தல் 2024 பெயர் குறித்த நியமனப்பத்திரங்களைப் பொறுப்பேற்றல், வைப்புப் பணம் செலுத்துதல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.சத்நாயக்க அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆவது மற்றும் 8 ஆவது பிரிவுகள் குறித்து வாக்காளர்களுக்கு பின்வரும் விடயங்களைத் தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 2024, செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவிருப்பதாக பொதுமக்களுக்கு இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.
அந்தத் தேர்தலுக்குரிய பெயர்குறித்த நியமனப்பத்திரங்கள், 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரையான காலப்பகுதிக்குள் இராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையக கேட்போர்கூடத்தில் பொறுப்பேற்கப்படும்.
அன்றைய தினம் அதாவது 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒப்படைக்கப்படுகின்ற பெயர்குறித்த நியமனப்பத்திரங்கள் சம்பந்தமாக ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும். எவரேனும் எதிர்த்தரப்பு வேட்பாளர் ஒருவரினால் அல்லது எதிர்த்தரப்பு வேட்பாளரின் பெயர்குறித்த நியமனப்பத்திரத்தில் கையொப்பமிட்ட நபரால் இந்த ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும்.
பெயர்குறித்த நியமனப்பத்திரங்களை ஒப்படைக்கின்ற அனைத்து வேட்பாளர்களும் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களை ஒப்படைக்க முன்னர் உரிய வைப்புப் பணத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரொவர் சார்பாக ரூ.50,000/- தொகையையும், ஏனைய வேட்பாளரொருவர் சார்பாக ரூ.75,000/- தொகையையும் வைப்புப் பணமாக செலுத்த வேண்டும்.
இந்த வைப்புப் பணம் 2024 யூலை மாதம் 26 ஆம் திகதி முதல், பெயர்குறித்த நியமன திகதிக்கு முந்திய தினமான அதாவது 2024 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி மதியம் 12.00 மணிக்கு முந்திய இடைப்பட்ட காலத்துள், வேலை நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பிப 4.15 மணி வரை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை நிதி அலுவலரினால் பொறுப்பேற்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் பெயர்குறிப்பீடு செய்யப்படும் வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர்கள் வைப்புப் பணத்தைச் செலுத்தும்போது, அவர் பாராளுமன்றத்தின் தெரிந்தனுப்பப்பட்ட உறுப்பினரொருவராக இருப்பவரென பாராளுமன்றத்தின் உறுப்பினரொருவராக இருந்தவரென பாராளுமன்ற செயலாளர் நா கையொப்பத்தின் கீழான சான்றிழொன்றின் மூலம் உறுதிப்படுத்துதல் ஒரு தேவைப்பாடாகும்.