ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், நிறுவனங்களின் செயற்பாடுகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பன குறித்த அறிவுறுத்தல்கள் குறித்து அந்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு தேவையான உத்தரவுகள் மற்றும் உப நடவடிக்கைகளும் குறித்த சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்படவுள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் அந்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.