முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரம் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல எனவும் எனவே தேர்தல் காலங்களிலும் இத்திட்டம் தொடர்ந்தும் செயற்படும் எனவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்தார்.
‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் பணிகளை இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் 25.07.2024 நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோத சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன இதனைக் குறிப்பிட்டார்.
‘’இந்த இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கை மக்களுக்கான மிக முக்கியமான வேலைத்திட்டமான ‘உறுமய’ காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் எமது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம். இதுவரை 100,000இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
‘உறுமய’ வேலைத்திட்டம் என்பது பல கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும் ஒரு தொடர்ச்சியான வேலைத்திட்டமாகும். அதன் முதற்கட்டமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபோதும் அரசியல் வேலைத்திட்டம் அல்ல. தேர்தல் காலங்களில் கூட இந்த காணி உறுதிகள் வழங்கப்படும். ஆனால் அதற்கு அரசியல் தலையீடு இருக்காது.
பிரதேச செயலாளரின் ஊடாக வழங்கப்படும் ஏனைய சேவைகளைப் போன்று இந்த காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படுகின்றன. எனவே, தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது, இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு ஒரு காரணமாக இருக்காது. இந்த திட்டம் எந்த தேர்தல் சட்டத்தையும் மீறாது.
ஏனெனில், இந்த காணி உறுதிகள் தேர்தல் காலத்தில் பொது மேடைகளிலோ அல்லது அரசியல்வாதிகளின் பங்களிப்புடனோ வழங்கப்படுவதில்லை. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் செயல்முறையை மேலும் திறம்படச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.