தாதியர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய சேவைகள் முறையாக வழங்க முடியாத நிலையில் மாத்தளை ஆதார வைத்தியசாலையின் பணிகள் 24.07.2024 முற்றிலும் ஸ்தம்பிதமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாதியர் பற்றாக்குறை காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ள பணிகள் சம்பந்தமாக மாத்தளை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளரின் தலைமையில் அவசர கூட்டமொன்று வைத்தியசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,
மாத்தளை வைத்தியசாலையில் தாதியர்கள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு முறையான சேவை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மாகாண அரசின் கீழ் இயங்கிய மேற்படி வைத்தியசாலையை மத்திய அரசு பொறுப்பேற்றதன் பின் தாதிமார்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை அறிவிக்கப்படாதுள்ளது.
இவ்வைத்தியசாலைக்கு முறைப்படி 400 தாதியர்களுக்கான தேவை இருந்தபோதும் தற்போது 280 தாதியர்களே சேவையில் உள்ளனர். இந்நிலையில் கனிஷ்ட ஊழியர்களின் பற்றாக்குறையும் நிலவுகின்றது- என்றார்.
தாதியர்களின் தேவை மற்றும் குறைகள் சம்பந்தமாக குரல் எழுப்பும் அகில இலங்கை ஐக்கிய சம்மேளனத் தலைவர் ரவி கஹந்தமக ஆரச்சி கருத்துத் தெரிவிக்கையில், மாத்தளை வைத்தியசாலையில் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கும் தாதிமார் மற்றும் கனிஷ்ட ஊழியர் பற்றாக்குறைப் பிரச்சினை காரணமாக நோயாளர்களுக்கான சேவைகள் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்நிலைமை தொடர்ந்தால் மேற்படி வைத்தியசாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்