3000 பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 24.07.2024 பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி செயற்படுத்தப்படும் பிரிவேனா மற்றும் பிக்குணி கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் பிக்குகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது.
இதுவரை காலமும் பிரிவேன்களில் கற்கும் பிக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை என்பதோடு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த புலமைப்பரிசில் திட்டம் செயற்படுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
பிரிவேன் (சாதாரண தரம்) க.பொ.த(சாதாரண தரம்) பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து உயர் பிரிவேன் பரீட்சைக்கு அல்லது க.பொ.த(உ.த) பரீட்சைக்கு தோற்றும் பிக்கு மாணவர்கள், பிக்குணிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கு மாதம் 6000 ரூபாய் வீதம் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட உள்ளது. புலமைப் பரிசில் தவணைத் தொகையுடன் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஒவ்வொரு மாணவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.18 000/- வைப்புச் செய்யப்படும்.
எதிர்வரும் நாட்களில் இந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்விற்கு அழைக்கப்படாத ஏனைய மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக தவணை தொகை வைப்புச் செய்யப்படும்.
புலமைப் பரிசில் பெறும் அனைத்து மாணவர்களும் பிரிவேனாவுக்குப் பொறுப்பான பிக்கு கல்வி நிறுவனத்திற்குப் பொறுப்பான பிக்கு ஆகியோரின் பூரண பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து நடவடிக்கைகளும் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பிரிவேனா கல்விப் பிரிவுகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து வருடாந்த சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவிற்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் உள்ள 10126 பாடசாலைகளையும் உள்ளடக்கி, 106000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும். 1ஆம் தரம் முதல் சாதாரண தரம் வரை கற்கும் மாணவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் வீதம் 12 வருட காலத்திற்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமும் நிறைவடைந்து வருகிறது.
நிவாரணம் தேவைப்படும் எவரையும் கைவிடக்கூடாது என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிபடி இந்த புலமைப்பரிசில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.