மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை சுற்றுலா அமைச்சின் ஊடாக வழங்க முடியும் என ஜனாதிபதி குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது எமக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்க முறையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
அப்போது அவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகள் மூலம் அதிக வருமானம் பெறலாம். அனைவரும் இணைந்து புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.