விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 22.07.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.. இதன்படி எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்த தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் விவசாய நவீனமயமாக்கல் நிலையங்கள் ஊடாக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தலா 25 மில்லியன் ரூபா வீதம் 650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பிரதேச செயலகங்களில் விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, குறித்த வேலைத்திட்ட செலவில் 30% இற்கும் அதிகமான பங்களிப்பை விவசாயத் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் வழங்குவதுடன், மீதமுள்ள 70% அரசாங்கத்தின் பங்களிப்பாகவும் உள்ளது.
சுழற்சி முறைக் கடன் திட்டமாக செயல்படுத்தும் வகையில், அரசு வழங்கிய பங்களிப்பை விவசாய நவீனமயமாக்கல் கடன் திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடனாக, இலங்கை, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று அரச வங்கிகளில் இருந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் வங்கி மூலம் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், பொறிமுறைமையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, இலங்கை வங்கியின் தலைமையகத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளரின் பெயரில் உள்ள கணக்கில் வைப்பு செய்யப்பட்ட நிதியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் பயனாளி தேர்ந்தெடுத்த வங்கியின் மூலம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடனாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது.
கடன் சலுகைக் காலம் அதிகபட்சம் 06 மாதங்கள் ஆகும். மேலும் கடன் சலுகைக் காலம் உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகபட்ச காலம் 05 வருடங்கள் ஆகும். மேலும், விவசாயிகள் அல்லது விவசாய தொழில்முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்ளும் கடன் தொகை மற்றும் வேலைத் திட்டத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், கடன் சலுகைக் காலம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவை விவசாய நவீனமயமாக்கல் மையங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்த வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி
‘’நாம் இப்போதேனும், உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்கு மாறுவது அவசியம். இந்த ஒப்பந்தத்தின் மூலம், உற்பத்தி திறன் கொண்ட தரப்பினரைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து, தேவையான வசதிகளை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு மாறுவதற்கு முயற்சித்து வருகிறோம்.
இதுவரை மக்களுக்கு உதவிகளை வழங்கி, உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சி செய்தோம். ஆனால் இதுவரை எங்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே வெற்றி சாத்தியமாகும். விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் பாரிய சாதனைகளை எட்டுவோம் என நம்புகிறோம். இந்த திட்டம் நீண்ட காலத்திற்குத் தேவையான இலக்குகளை அடைய மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, ஒரு அமைச்சு என்ற ரீதியில் நாம் இந்த வேலைத்திட்டத்திற்கு எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருகின்றோம்.’’ என்றார்.
பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க
‘’ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வரவு செலவுத் திட்டங்களிலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் அதன் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான படியாகும்.
இதுவரை பயன்படுத்தப்படாத நிலத்தை தேசிய தொழில்முனைவோருக்கு வழங்குவதும், அந்த நிலங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதும், தேசிய தொழில்முனைவோர் மூலம் வர்த்தக விவசாயத்தை உருவாக்குவதும் இந்த நோக்கங்களில் ஒன்றாகும்.
விவசாய நவீனமயமாக்கல் திட்ட ஜனாதிபதி ஆலோசகர் சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க, விவசாய உற்பத்தித்திறன் மற்றும் காணிப் பிரிவு ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் சந்திரா ஹேரத், விவசாய உற்பத்தித்திறன் மற்றும் காணிப் பிரிவு பணிப்பாளர் ஏ.ஏ.சி. நிலந்தி பெரேரா, உள்ளிட்ட அதிகாரிகள், இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.எம்.என்.ஜீவந்த, பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் (பதில்) ஈ.ஏ.டி. ஜனித பிரியசாந்த, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரச வங்கி பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.