அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுவதிலிருந்து தாம் விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது.
தமது கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காகத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாத பிற்பகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிடும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான விவாதத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தின் பின்னர், சக ஜனநாயகக் கட்சியினரிடையே ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.
அதேநேரம், டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் உள்ளிட்ட பலர் ஜோ பைடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க மக்களின் நலன்களுக்காகக் கடினமான முடிவை எடுத்தமைக்காக ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.