சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அவற்றை ஆராய்ந்த பின்னர் அதற்கான குழுவினால் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதன்பின், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே உள்ள ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, அதற்கான நீக்கம் இருந்தால், அவையும் செய்யப்பட்டு, நிவாரணம் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் அது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஏனைய மாகாணங்களில் அதிகாரிகள் தரப்பில் சில தயக்கம் காணப்படுவதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது முதற்கட்ட நிவாரணத்தின் கீழ் சுமார் 18 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நன்மை 4 வகைகளின் கீழ் வழங்கப்படுவதுடன் இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மாதாந்திர கொடுப்பனவாக 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
“ஏழை” பிரிவினருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 8,500 ரூபாயும், “அதிக ஏழை” பிரிவினருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 15,000 ரூபாயும் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய 2 பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பலன்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதுடன், அந்த 2 வகைகளின் கீழ் சுமார் 8 லட்சம் பயனாளிகள் ஏற்கனவே பலன்களைப் பெற்று வருகின்றனர்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்தவுடன், முதல் கட்டமாக அஸ்வெசும பெறும் பயனாளிகளின் தரவுகள் உடனடியாக புதுப்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்தார்.