புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 20.07.2024 காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் இருந்த குறித்த பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதவானுமான அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை ஒன்றை கடந்த 8 ஆம் திகதி பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று காலை கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொறுப்புக் கூறும் வழக்கு கடந்த 8 ஆம் திகதி கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் குறித்த வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நிலையில், நீதவான் இவ்வாறு கைதுக்கான திறந்த பிடியாணை உத்தரவை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னரும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் அவர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரச சார்பற்ற நிறுவனமொன்று இயங்கிவந்த கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்குள்ள சொத்துக்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.