மனித வள அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பல்வேறு தர நிலைகளில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளை உயர் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவக் கல்லூரிகளாக மாற்றி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தொடர்பான பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தேசிய தொழிற்கல்வி தகுதியை (NVQ) மறுபரிசீலனை செய்து சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய அவுஸ்திரேலிய தகுதி நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மூலோபாய நடவடிக்கையாக இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மின்சார இணைப்பு முறைமையையும் நில இணைப்பையும் ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் 18.07.2024 நடைபெற்ற ‘2024 இலங்கை மனித மூலதன உச்சி மாநாட்டில்” (Sri Lanka Human Capital Summit) உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரே தளத்தை அமைக்கும் நோக்குடன் ‘இலங்கை மனித மூலதன உச்சி மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது.
“எதிர்காலத்திற்கு ஏற்ற தொழிலாளர் படையைக் கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வாய்ப்புகளுக்கான கதவுகளை திறத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த ஆண்டு மாநாட்டில் மனித மூலதனத்தை வளர்ப்பது, பயன்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த முயற்சியானது வெறும் பொருளாதார வளர்ச்சிக்கு அப்பால் சென்று இலங்கையை குறைந்த நடுத்தர வருமான பொருளாதாரத்தில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திறமையை வளர்த்தல், புதுமைகளை மேம்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதில் எதிர்பார்ப்பு மாற்றம் தங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அரச துறை திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, நிதிச் சேவைகள் மற்றும் முன்முயற்சிகள் ஆகிய துறைகளில் மூலோபாய ஆற்றலுக்கு இந்த மாநாடு முன்னுரிமை அளிக்கும்.
முதலீட்டுச் சபையின் தலைவரும் மனித மூலதன உச்சி மாநாட்டின் தலைவருமான தினேஷ் வீரக்கொடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்தார்.