ஊடகவியலாளர் – ஏ.சி பௌசுல் அலிம்
மினுவாங்கொடை வலயக் கல்வித் திணைக்களம் கௌரவ எம்.ஐ. அதாஹுர் ரஹ்மான் அவர்களை கௌரவித்தது. மினுவாங்கொடை வலயக் கல்வித் திணைக்களம் கௌரவ எம்.ஐ. அதாஹுர் ரஹ்மான் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ் தினப் போட்டியின் ஒரு அங்கமாக விசேட நிகழ்வொன்றை 18.07.2024 காலை 8.30 மணியளவில் அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் உம்மு ஹபீபா கேட்போர் கூடத்தில் கொண்டாடியது.
கௌரவ அதாஹுர் ரஹ்மானின் பங்களிப்பு
கௌரவ அதாஹுர் ரஹ்மான் அவர்கள் தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் கல்வித் துறைக்கும் தமிழ் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பை மதிக்கும் வகையில் மினுவாங்கொடை வலய கல்வி திணைக்களம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2003 முதல் 2014 வரையான காலப்பகுதியில் கடமை புரிந்த அதாஹுர் ரஹ்மான் அவர்கள் கல்விச் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார்.
நிகழ்வின் முக்கியத்துவம்
மினுவாங்கொடை வலய கல்வி திணைக்களத்தின் தமிழ் மொழி பிரிவுக்கான பணிப்பாளர் எம்.ஏ.எம் ரிஸ்வி நிகழ்வில் உரையாற்றினார். அவர் தனது உரையில் அதாஹுர் ரஹ்மான் அவர்களின் முக்கிய பங்களிப்புகளை பற்றிக் குறிப்பிட்டார். ரிஸ்வி கூறியதாவது, “அதாஹுர் ரஹ்மான் அவர்கள் தனது கடமைகளை மிகவும் நன்கு நிர்வகித்தார். அவருடைய செயல்கள் கல்விச் சமூகத்திற்கு மிகுந்த பலன்களை அளித்தன.”
சிறப்பு விருந்தினர்கள்
இந்நிகழ்வில் மேலும் பல அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன், கௌரவ அதிதியாக மினுவாங்கொடை வலய கல்வி திணைக்களத்தின் முன்னாள் கல்வி பணிப்பாளர் எம். அஷ்ரப் மற்றும் பிரதம அதிதியாக கௌரவ எம்.ஐ. அதாஹுர் ரஹ்மான் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மினுவாங்கொடை வலயக் கல்வித் திணைக்களம் நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்து, தமிழ் தினப் போட்டியின் ஒரு முக்கிய அங்கமாக கொண்டாடியது. இதுபோன்ற நிகழ்வுகள் நமது சமூகத்தில் பெரும் அங்கீகாரம் மற்றும் பேரன்பினை உருவாக்குகின்றன. அதனாலேயே, இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதில் ஐயமில்லை.
கௌரவ அதாஹுர் ரஹ்மானின் வாழ்க்கை மற்றும் கல்வி பயணம்
ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி கண்ட ஆளுமை அஷ்ஷேக் எம். எல் அதாஉர்ரஹ்மான் “ஸஹ்ரி” இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளமை அகமகிழ்வை ஏற்படுத்துகிறது. முஹம்மது லெப்பை மற்றும் சித்தி சுறையா ஆகியோரின் மூத்த புதல்வரான அதாஉர்ரஹ்மான் அவர்கள் 1967 ஆம் ஆண்டு மடுள்போவ (ஓலான) யில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை தும்புளுவாவ முஸ்லிம் பாடசாலை மற்றும் மடுள்போவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் தொடர்ந்தார்.
பின்பு கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபுக் கலாசாலையில் குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்த இவர் இரு வருடங்களுக்குப் பின் ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபுக்கல்லூரியில் ஷரீஆத் துறையில் ஏழு வருட கற்கையை 1988 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்; அக்காலப் பகுதியிலே க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
பின்பு அஷ்ஷேக் அதாஉர்ரஹ்மான் “ஸஹ்ரி” நிகவெரடிய பள்ளிவாயலில் இமாமத் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் சமயம் 1990 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று கல்பான முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் தனது முதல் அரச பணியை ஆரம்பித்தார். அத்துடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கலைமானி (BA) பட்டப்படிப்பினை நிறைவு செய்து 1993 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1994 ஆம் ஆண்டு கொழும்பு அந்நாஸர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று 1998 ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார். இக்காலப்பகுதியிலே பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கைநெறி (PGDE) உள்வாரி பட்டதாரியாகத் தெரிவுசெய்யப்பட்டு அதனையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
1999 ஆம் ஆண்டு வேவல்தெனிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று பணிபுரிந்துகொண்டிருக்கும் வேளையில் 2000 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை (SLPS-II) பரீட்சையில் தேறி அதே பாடசாலையில் அதிபராகக் கடமையேற்று 2003 ஆம் ஆண்டில் இடமாற்றம் பெற்று மினுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில்- 2014 ஆம் ஆண்டு வரை அதிபராக கடமையைத் தொடர்ந்தார். இந்தக் காலப்பகுதியில் (2008) இலங்கை அதிபர் சேவை (SLPS-I)க்கு தரமுயர்தப்பட்டதோடு 2011 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகம் முன்னெடுத்த பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறியினையும் (PGDEM) முழுநேர பாடநெறியாக நிறைவு செய்தார்.
2014 ஆம் ஆண்டு திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி ஆசிரியர் கல்வியல் முதுமாணி (Master of Arts in Teacher Education) கற்கையினை சிறப்பாக நிறைவு செய்தார். 2014 ஆம் ஆண்டு முதல் உயன்வத்தை நூரானியா முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் அதிபராகப் பொறுப்பேற்று 2021 ஆம் ஆண்டு வரை கடமைபுரிந்தார். பின்பு ரம்புக்கன தாருல் உலூம் முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் அதிபராகப் பொறுப்பேற்று இன்றுவரை பணிபுரிந்துவருகின்றார்.
2021 ஆம் ஆண்டில் இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீட்சைக்குத் தோற்றித் தேறி கல்வி நிருவாக சேவையின் உதவிக் கல்விப் பணிப்பாளராக 2022.03.16 ஆம் திகதியிலிருந்து செல்லுபடியாகும் படி கடந்த 2024.07.01 ஆம் திகதியன்று நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.