கம்பஹா மாவட்டத்தின் பாடசாலை விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் 67 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் 15.07.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, சாகல ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ், Youth vision 2048 அமைப்பு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க, தேசிய மட்டத்திலான திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு விளையாட்டின் பங்களிப்பு முக்கியமானதாகும் என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல், நாட்டில் சரிவு கண்டிருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்பணித்திருப்பதாகவும், அந்த பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் சென்று ஊழல் அற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட பொருளாதார கட்டமைப்புக்குள் இந்நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எதிர்கால சந்ததியின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இளைஞர் விவகார மற்றும் நிலைபெறு அபிவிருத்தி பணிப்பாளர் சசிர சரத்சந்ர, Youth vision 2048 அமைப்பின் ஆலோசகர் கலாநிதி லசந்த குணவர்தன, அமைப்பின் தலைவர் டேன் போத்திவெல,இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள், விளையாட்டு ஆலோசகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.