அரசியலமைப்பின் 19 வது திருத்தம் முறையாக ஏற்றுக்கொள்ளப்படாததால், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற கட்டணமான 5 இலட்சம் ரூபாவுக்கு உட்பட்டே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்ற கட்டணத்தை ஜூலை 31 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படாததன் காரணமாக, அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தி அங்கீகரிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுனவால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.