இலங்கை ஜனநாயக நாடு என்பதை நிரூபிப்பதற்காக அவ்வப்போது தேர்தல்கள் நடத்தப்படுவதுடன், நீதித்துறை, நிருவாகத்துறை என்பன அதன் சுய ஆதிக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பீ. கமால்தீன் கேட்டுள்ளார்
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் குறித்த காலப் பகுதியில் நடத்தப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் நீதித்துறையின் மீதும் நிருவாகத் துறையின் மீதும் அரசு செல்வாக்கு செலுத்தி, தேர்தல்களை திட்டமிட்டு பிற்படுத்தி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க முடியாது
சம்பள உயர்வு கோரியும் வாழ்க்கை செலவு உயர்வுக்கு தீர்வு வேண்டியும்
தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பீ. கமால்தீன் மேற்கொண்டவாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இவ்வாறான சம்பள அதிகரிப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அரசாங்க ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் வேண்டி நிற்கின்றன.
இதனால் 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை காத்திராமல், இப்போதே ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற போது அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்
இதன் அடிப்படையில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர் கட்டணம், எரிபொருள்களின் விலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கின்ற போது அரசாங்க ஊழியர்களது மாதாந்த வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட்டு, அவர்களுடைய சுமை குறைவடையும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு விலை குறைப்பு செய்கின்றபோது அரசாங்க ஊழியர்கள் மட்டுமின்றி சாதாரண பொது மக்களும் நன்மை அடைவர். இவ்வாறான செயற்பாடுகளை செய்து மக்களின் அவல நிலையை போக்குகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலகுவாக வெற்றியடைந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதை ஜனநாயக முன்னணியின் சார்பாக வலியுறுத்தி கூறுகிறோம்
எனவே நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, பாராளுமன்றத் தேர்தலோ நடைபெறுவதற்கு முன்பாக அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை அல்லது வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றபோது தேர்தல்களில் மக்கள் ஆர்வம் காட்டு நிலை உருவாகும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.