ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்கு ஓட்டுப்போடாத ஒரேயொரு காரணத்தினால் தான், கோத்தாபய முஸ்லிம்களைத் தண்டித்தார். இவ்வாறு முஸ்லிம்களைத் தண்டிக்க, கோத்தாபய அரசு எடுத்த மிக மோசமான செயல்தான் ஜனாஸா எரிப்பு என, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா குற்றம் சுமத்திப் பேசினார்.
ஜனாஸா தகனம் பற்றிய ஆவணப் படம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு கூறினார்.
பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,
“முஸ்லிம்கள் படும் துன்பங்களை விவரிக்கும் ஆவணப்படத்தில், அதன் தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதே வேளையில், இந்தப் பிரச்சினை உண்மையில் ஆட்சியில் இருந்த இனவாத ஆட்சியின் விளைவு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவரது ஆட்சியாளர்களும் அவர்களுக்கு வாக்களிக்காததால், முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் பிற சிறு பான்மையினர்களைத் தண்டிப்பது பொருத்தமானது என்று நினைத்தனர்.
இந்த இனவாத, மத வெறி மற்றும் மனிதாபிமானமற்ற பார்வையின் விளைவாகத்தான், மரணித்த முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரித்து தகனம் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் .
அன்றைய அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிகளும், இந்த முடிவுகள் எந்த பகுத்தறிவுக் காரணத்தினாலும் எடுக்கப்பட்டவைகள் அல்ல என்பதை நன்கு தெரிந்தும், கைகெட்டி சும்மா பார்த்துக் கொண்டிருந்தனர்.
எனவே, பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறு பான்மையினராக இருந்தாலும், எந்த ஒரு சமூகத்திற்கும் இவ்வாறு நடக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அத்துடன், இதனைத் தடுக்கவும் நாம் முயற்சிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களையும் நாம் ஆவணப் படத்தில் சித்தரிக்க வேண்டும்” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )