கடந்த 2023.09.18,19 ஆம் திகதிகளில் தத்ரிஸ்தானின் தலைநகரான காசானில் “அல்குர்ஆனை உலகளாவிய மயப்படுத்துவதில் நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய மாநாடொன்று அங்குள்ள அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கற்கைக்கான மத்திய நிலையத்தின் கௌரவத் தலைவர் முப்தி பரீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அம்மாநாட்டில் ரஸ்யாவின் தத்ரிஸ்த்தான் மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் அம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பாக, ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். பாழில் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள், ‘அல்குர்ஆனை உலகளாவிய மயப்படுத்துவதில் நவீன தொழில்நுட்பம்’ தொடர்பில் தமது ஆய்வுகளை முன்வைத்து உரையாற்றினர். அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்களும் “அல்குர்ஆனைப் பரப்புவதில் தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்களும் அவற்றை வெற்றிகரமாகக் கையாள்வதற்கான வழிமுறைகளும்” எனும் தலைப்பில் விரிவான ஆய்வொன்றை அரபு மொழியில் முன்வைத்து உரையாற்றினார்கள். அத்துடன் எமது தாய்நாடான இலங்கையைப் பற்றியும் சுருக்கமாக முன்வைத்தார்கள்.
குறித்த உரை மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பினரதும் மதிப்பைப் பெற்றதுடன் அவர்களது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்படத்தக்கது.
மேலும் அம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்கள், உலகளாவிய ரீதியில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டச் செய்வதில் பங்களிப்புச் செய்பவர்களை கௌரவிக்கும் ரஸ்யா நாட்டின் கௌரப் பட்டமான “றோஸ்மி றாசா” எனும் பட்டமும் தங்கப் பதக்கமும் வழங்கி, பொன்னாடைபோற்றி கௌரவிக்கப்பட்டார்கள்.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) கீழ் இயங்கும் அமைதிக் கலாசார நிறுவனத்தின் போசகரும், ஆசிய, ஐரோப்பிய நீர்வளவியல் வரைபடங்களுக்கான அமைப்பின் தiலைவருமான சங்கைக்குரிய டாக்கிரோவ் ஏஞ்சல் றிசாகோவிச் அவர்கள் இக்கௌரவப் பட்டத்தை வழங்கி கௌரவித்தமை சிறப்பம்சமாகும்.