உரிய தினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காகத் தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக்க தேரரிடம் ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாகத் தற்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வணிகக் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை செலுத்த வேண்டிய கடனிலிருந்து சுமார் 8 பில்லியன் டொலர்களைக் குறைக்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளரிடம் தாம் கூறியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைக்க தாம் பரிந்துரைத்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.