வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்
“உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட காணி உரிமையாளர்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காணி உரிமையாளர்களுக்கான “உறுமய” காணி உறுதிகளை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் தங்கள் காணிகளுக்கான முழுமையான உரிமைக்குப் பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் மட்டுமே அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்நிலையை மாற்றி, காணி உரிமையாளர்களுக்கு அவற்றின் முழு உரிமையையும் வழங்கும் வகையில் உறுமய தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இலங்கையின் விவசாய உற்பத்திகள் தன்னிறைவு காண்பது மட்டுமன்றி ஏற்றுமதி செய்யும் நிலைக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்பாகும். அதன் ஒரு படியாகவே விவசாயப்பெருமக்களுக்கு அவர்களின் காணிகளுக்கான முழு உரிமை வழங்கப்படுகின்றது
இந்நாடு ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கு கூட இருக்க முடியாத நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்தது. அதன்போது எரிபொருள், கேஸ், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பாரிய தட்டுப்பாடு காணப்பட்டது. பொதுமக்கள் இந்த நாட்டை விட்டும் வெளியேறுவதற்கு வரிசைகளில் காத்து நின்றார்கள்
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் துணிச்சலான, தூரதிருஷ்டியான தலைமைத்துவத்தினால் இன்று நிலை மாறிவிட்டது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இன்று இந்நாட்டுக்கு வருவதற்கு வரிசையில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது
இந்த நிலை தொடர்ந்தும் இந்நாட்டில் நிலவ வேண்டும். நாடு இன்னும் அபிவிருத்தி அடைந்து, சுபீட்சமடையவேண்டும். அதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவம் இந்நாட்டுக்குத் தொடர்ந்தும் தேவை. அதனை அவர் வழங்க வேண்டும் என்பதே இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நாடு நெருக்கடியில் இருந்தபோது அதனைப் பொறுப்பேற்க முடியாது ஓடியொளிந்தவர்கள் இன்று நாட்டை மீட்டெடுக்க தங்களால் முடியும் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இரவில் விழுந்த படுகுழியில் பகலிலும் விழ எங்கள் மக்கள் தயாராக இல்லை. அவர்களுக்கு உண்மைதெரியும். தங்களையும் நாட்டையும் மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இந்நாட்டு மக்கள் உரிய முறையில் நன்றிக் கடன்செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உள்ளது என்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, டீ. ஹேரத், குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரியஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ , அசங்க நவரத்ன, சுமித் உடுகும்புற , மஞ்சுளா திசாநாயக்க , முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியசம், வடமேல் மாகாண சபையின் தவிசாளர் டிகிரி அதிகாரி , ஜனாதிபதிசெயலாளர் சமன் ஏக்கநாயக்க , மாகாண பிரதமசெயலாளர் தீபிகா கே குணரத்தின, குருநாகல் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.