கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
20 இலட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி 05.07.2024 முற்பகல் குருநாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி சிலர் சோசலிசம் பற்றி கதைத்தாலும், மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்குவதே உண்மையான சோசலிசமாகும் என்றும் தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, “உறுமய” காணி உறுதிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் மேலும் 20 இலட்சம் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடையாள ரீதியாக காணி உறுதிகளை வழங்கி வைத்தார்.
அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தலைவர்கள் எவரும் முன்வராத நிலையிலேயே தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு இன்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டை புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக குருணாகல் மாவட்டம் புதிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விரிவான அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.