வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட அதிரடி சோதனை பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் இந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது அல்பேனியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி ஒருவரிடம் இருந்து சுமார் 11 இலட்சம் ரூபாயை இந்த வேலைவாய்ப்பு நிறுவனம் வசூலித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை யாரும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் சந்தேக நபரின் காரை சோதனையிட்ட போது, கிட்டத்தட்ட 60 கடவுச்சீட்டுகள் மற்றும் பல விண்ணப்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 32 வயதான சட்டத்தரணி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.