பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு நபர்கள் கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டிற்கு சரியான கொள்கையுடன் அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும் போது விமர்சனம் செய்வோர் அதிகாரத்திற்காக நாளாந்தம் வெவ்வேறு கதைகளை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் வெற்றிபெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், இது நாட்டுக்கு கிடைத்த தனித்துவமான வெற்றி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) பாராளுமன்றத்தில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். அந்த உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் கட்சி, நிற பேதம் இன்றி இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக தாம் அரசியலில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தாம் எப்பொழுதும் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்து வருவதாகவும், அரசியல் அதிகாரத்திற்காகவோ அல்லது பிரபல்யத்திற்காகவோ முடிவுகள் எடுப்பதில்லை எனவும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை,
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சவாலான பயணம் தொடங்கிய நாள் முதல், நான் அவ்வப்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பிலான விடயங்களை முன்வைத்தேன். முதலில் நாங்கள் பின்பற்றி வரும் திட்டங்களை பாராளுமன்றத்தில் விளக்கினோம். அதன் பிறகு நாங்கள் செய்த முன்னேற்றம் குறித்து விளக்கினோம்.
2022ஆம் ஆண்டு கடன் செலுத்த முடியாத நாட்டிற்கு, மீண்டும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சவாலான பயணத்தில் இன்னுமொரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு எம்மால் முடிந்தது.
கடந்த ஜூன் 26ஆம் திகதி எது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் மீண்டும் கடனைச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முடிந்தது.
அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள், எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த இணக்கப்பாடுகளிலும், ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.அன்றிரவு இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்களுக்கு இதுகுறித்து அறிவித்தேன்.
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சவால் மிக்க பயணத்தின் ஆரம்ப நாள் முதல் நான் இதுகுறித்து அவ்வப்போது பாராளுமன்றத்தில் தகவல்களை முன்வைத்தேன்.முதலில் நாம் பின்பற்றும் திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தினோம். அதன்பின்னர் நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றங்கள் குறித்து தகவல்களை முன்வைத்தோம்.
இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்ட பின்னர், எமது நான்கு அம்சக் கொள்கைகளை நான் பாராளுமன்றத்தில் முன்வைத்தேன்.
1. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது,
2. சர்வதேச நிதி மற்றும் சட்ட வல்லுனர்களான லாஸார்ட் மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கடன் உறுதிப்படுத்தல் திட்டத்தைத் தயாரித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டுவது,
3. வெளிநாட்டு முதலீட்டை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்குவதுடன், டிஜிட்டல் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது,
4. இத்திட்டத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டுக்குள் கடனற்ற பொருளாதாரத்தை உருவாக்கி அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது,
அதிலிருந்து நாம் கடினமான, கஷ்டமான பயணத்தை ஆரம்பித்தோம். அந்தப் பயணமே எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நாம் அறிந்திருந்தோம். படிப்படியாக நாம் முன்னேறிச் சென்றோம். 2023 – 2024 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அந்த வேலைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தினோம்.
2023 மார்ச் மாதத்தில் ஐ.எம்.எப். நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான இணக்கப்பாடுகளை எட்டினோம். அதன் முதல் தவணையை 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி பெற்றுக்கொண்டோம். நாம் அடைந்திருந்த முன்னேற்றத்தை மீளாய்வு செய்த பின்னர், இரண்டாம் தவணையை 2023ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதியும், மூன்றாம் தவணையை 2024 ஜூன் 12ஆம் திகதியும் பெற்றுக்கொண்டோம்.
ஐ.எம்.எப். வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், கடன் மறுசீரமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை நாம் ஆரம்பித்தோம். இந்தப் பணிகளுக்குத் தேவையான நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக லஸார்ட் (Lazard) மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து பெற்றோம்.
எமது வெளிநாட்டு கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 10.6 பில்லியன் டொலர் இரு தரப்பு கடன்,11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்பு கடன்,14.7 பில்லியன் டொலர் வணிகக் கடன்,12.5 பில்லியன் டொலர் கடன் பிணை முறிகள் மூலம் பெறப்பட்டவை. கடனை வெட்டிவிடுதல், கடன் சலுகை காலம், கடனை மீளச் செலுத்தும் கால அவகாசத்தை நீடித்தல் உள்ளடங்களான கடன் மறுசீரமைப்பு மற்றும் அதடனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் பல தரப்பினர், பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இவற்றில் சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை. சில விடயங்களில் பாதி உண்மையே இருந்தது. அதனால் கடன் மறுசீரமைப்பு குறித்த விடயங்களில் சர்வதேச நடைமுறைகளையும், உண்மைகளையும் நான் இந்தத் தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
வெளிநாட்டுக் கடன்கள் என்றால் என்ன? வெளிநாடுகள் கடன்களை வழங்க எங்கிருந்து பணத்தைப் பெறப்படுகின்றன? அந்தந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தையும், சேமிப்புக்களையுமே எமது கடனாக வழங்குகின்றனர். ஆனால் எமது நாட்டில் எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யாமல் கடன் சலுகைகளைப் பெற வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றனர். அவ்வாறு நடக்காது. இது நடைமுறைச் சாத்தியமற்றது. சர்வதேச நடைமுறைகளுக்கமைய அவ்வாறு செய்ய முடியாது. மக்களின் வரிப் பணத்தைப் போலவே, அவர்களின் சேமிப்புக்கள் குறித்து தீர்மானங்களை எடுக்கும்போது, எங்களுக்கும் சில அர்ப்பணிப்புக்களைச் செய்ய நேரிடும். நாம் இதற்காக அர்ப்பணிப்புச் செய்யாவிட்டால், அந்நாட்டு மக்கள் எங்களுக்காக அர்ப்பணிப்புச் செய்ய முன்வர மாட்டார்கள்.
அதுமட்டுமன்றி, கடன் மறுசீரமைப்பு என்பது மிகக் கடினமான பணி. இந்தப் பணி கடினமானது மற்றும் வேதனையானது என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். கடன் வழங்குநர்களுக்கும், கடனாளிகளுக்கும், நாட்டு மக்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும், இந்தப் பணி கடினமானது. உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்கள், அடிப்படை கடன் தொகையைக் குறைக்கமாட்டார்கள். எமக்கு சலுகைகளை மட்டுமே பெற முடியும். கடன் செலுத்தும் காலத்தை நீடித்துக் கொள்வது, கடன் சலுகைக் காலம், வட்டி வீதத்தைக் குறைப்பது ஆகிய விடயங்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
எனினும், இந்த யதார்த்தைப் புரிந்துகொள்ளாமல், சிலர் அடிப்படை கடன் தொகையைக் குறைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இன்னும் சிலர் தாம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அடிப்படைக் கடன் தொகையில் 50 வீதத்தைக் குறைத்துக் கொள்வதற்கு கடன் வழங்கியுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுகின்றனர். இவ்வாறான பணியைச் செய்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் காண்பது அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் சொல்வதை மட்டும் கடன் வழங்குநர்கள் செய்யமாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச பொருளாதார வழிமுறைகள் குறித்து இவர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை என்பதே இவ்வாறான கருத்துக்களின் மூலம் தெரிகிறது.
கடன் மறுசீரமைப்பை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கடன் வழங்குநருக்கோ, கடன் பெறுநருக்கோ இல்லை. இதுகுறித்த தீர்மானத்தை ஐ.எம்.எப் நிறுவனமே எடுக்கும். நாட்டில் கடன் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதற்குத் தேவையான மறுசீரமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அந்த நிறுவனமே தீர்மானிக்கும். அந்தந்த நாடுகளின் பொருளாதார பலம் குறித்து சுயாதீன மதிப்பீட்டின் பின்னர் அந்தத் தீர்மானத்தை எடுப்பார்கள்.
எமது நாட்டில் கடன் ஸ்திரத் தன்மை இல்லை என்று ஐ.எம்.எப். நிறுவனம் 2022ஆம் ஆண்டு நாம் கஷ்டத்தில் விழுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே எங்களுக்கு அறிவித்திருந்தது. அதேபோல் ஐ.எம்.எப். நிறுவனம் பின்பற்றும் நடைமுறை நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. குறைந்த வருமானம் பெறும் நாடுக் தொடர்பில் ஒரு நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். நடுத்தர வருமானம் பெறும் நாடுகள்தொடர்பில் வேறொரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதுகுறித்து ஒரு உதாரணத்தை முன்வைக்கிறேன். இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் வருகிறது. நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடன் ஸ்திரத்தன்மை விசேட வரையறைகளைப் பயன்படுத்தி கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொண்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கைக்காக அவர்கள் முன்வைத்த செயல்திட்டத்திற்கமைய 2032 ஆண்டு அரச கடன் தொகை, மொத்த தேசிய உற்பத்தியில் 95 வீதத்தையும்விட குறைத்திட வேண்டும். குறைந்த வருமானம் பெறும் நாடான கானாவிற்கு இதற்கு மாறான வேலைத் திட்டத்தையே முன்வைத்திருந்தனர்.
இந்த வேலைத் திட்டத்திற்கமைய 2028ஆம் ஆண்டில் அவர்களின் அரச கடனானது மொத்த தேசிய உற்பத்தியில் 55 வீதத்தைவிட குறைவானதாக இருக்க வேண்டும். கானாவும் இலங்கையைப் போன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியும் நானும் இதுகுறித்து அடிக்கடி பேசிவந்துள்ளோம். ஆனால் கானா என்பது குறைந்த வருமானம் பெறும் நாடாகும். எனினும், எமது இரு நாடுகளுக்கும் பொதுவான சில விடயங்களும் இருந்தன. சில விடயங்கள் மாறுபட்டிருந்தன. ஆனால் இரு நாடுகளுக்கும் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளது.
இந்தப் பின்னணியில், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் பெரிஸ் கழகம், இந்தியா மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. எனினும், இதில் எந்தவொரு தரப்பினருக்கும் சிறப்பிடம் கொடுப்பதற்கு எமக்கு அனுமதியிருக்கவில்லை. இந்த இரு தரப்பினரையும் சமமாக நடத்தும் பொது நிபந்தனைகளை தயாரிப்பதே எமக்கிருந்து பாரிய சவாலாகும்.
தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பூகோள அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த இந்த சிக்கலான சவாலை சந்தித்தோம். இதனால் எமது இலக்குகளை நோக்கிப் பயணிப்பது இலகுவானதாக அமையவில்லை. பொம்மலாட்டத்தையும் முகக் கவச நடனத்தையும் ஒன்றாக ஆடுவதைப் போல இது மிகவும் சிக்கலான பணியாக இருந்தது. இது செய்ய முடியாத பணியாகும். இருந்தாலும் நாம் செய்து முடித்தோம். எனினும், இந்த அனைத்து கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் ஐ.எம்.எப். வேலைத் திட்டத்தை ஆரம்பித்து 15 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வெளிநாட்டு இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வர முடிந்தது.
இந்த குறுகிய காலத்திற்குள் கடன் மறுசீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்த நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் நாம் முன்னணி வகிக்கிறோம். இது மிகப் பெரிய வெற்றியாகும். இது நற்செய்தியாகும்.
இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீன எக்ஸிம் வங்கி ஆகிய தரப்புக்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து நான் பாராளுமன்றத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அடிப்படை கடனை மீளச் செலுத்துவதற்காக 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் எங்களுக்கு கிடைத்துள்ளது. வட்டி வீதம் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட்டிவீதம் 2.1 அல்லது அதற்கு குறைந்தளவில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி கிடைக்கும்.
கடனை முழுமையாக செலுத்தி முடிக்க 8 வருட கால அவகாசம் கிடைத்துள்ளது. இன்னுமொரு வகையில் கூறுவதாயின், 2043ஆம் ஆண்டு வரை அவகாசம் கிடைத்துள்ளது.
கடன் சேவை காலத்தை நீடித்துக் கொள்வதுடன் அடிப்படைக் கடனை மீளச் செலுத்தும் தொகையை தொடர்ந்து அதிகரிக்க முடியும். இதன்பலனாக வட்டியாக செலுத்த வேண்டிய 5 பில்லியன் டொலர்களை சேமித்துக் கொள்ள முடியும்.
எனவே, பொருளாதாரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.அந்நியச் செலாவணியை அதிகரித்துகொள்ள வேண்டும். அரச அடிப்படை நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் கடனை மீளச் செலுத்தும் இயலுமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றின் ஊடாக எதிர்காலத்தில் வலுவான நிலையில் இருந்து கடன் செலுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும்.
2023ஆம் ஆண்டு எமது உள்நாட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்தோம். இதன்போது நாம் மிகவும் கவனமாக செயல்பட்டோம். எமது நாட்டின் நிதி நிறுவனங்கள் பலனவீனமடையாத வகையிலும், அந்தந்த நிறுவனங்களுக்கு, நெருக்கடி ஏற்படாத வகையிலும், வைப்பாளர்கள் நெருக்கடிகளைச் சந்திக்காத வகையிலும் உள்நாட்டு மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுத்தோம்.
தற்போது நாம் 10 பில்லியன் டொலர் உள்நாட்டு இரு தரப்புக் கடன் மறுசீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச பிரகடனங்களுக்கமைய பல்தரப்பு கடன்கள் இந்த வேலைத் திட்டத்திற்குள் உள்ளடங்காது. உண்மையில் பல்தரப்பு கடன்களை எந்த இடத்திலும் குறைத்துக் கொள்ள முடியாது. இவை ஐ.எம்.எப், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்களாகும்.
அடுத்தகட்டமாக 14.7 பில்லியன் அமெரிக்க டொலர் வணிகக் கடன்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் அந்தப் பணிகளை நிறைவுசெய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் எமது கடன் மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் பாராளுமன்ற அரச நிதி செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படும்.
முன்னதாக இரண்டு ஒப்பந்தங்களை மட்டும் நிதி செயற்குழுவில் சமர்ப்பிக்க எதிர்பார்திருந்தோம். ஆனால், தற்போது தனியார் பிணை முறி கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆனால், பிரான்சில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் ஒன்று நடப்பதால் இதனை சில நாட்களுக்கு பிற்போடுமாறு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கோரியுள்ளனர். இதற்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேன். எனினும், இதனால் எமக்கு பாதிப்பு ஏற்படாது. கானாவும், இலங்கையும் இவற்றில் கையெழுத்திட்டுள்ளன. இதுபற்றிய தெளிவுபடுத்தல்களுக்கான சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். அதேபோல் பிரான்சின் புதிய அரசாங்கத்துடன் பேச வேண்டிய இன்னும் பல விடயங்கள் இருக்கக் கூடும்.
பின்னர் இதுகுறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆராயுமாறு நிதி தொடர்பான குழுவிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுடன் இதுகுறித்து பேசியிருக்கிறேன். இந்த தகவல்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு இதுகுறித்து ஆழமான, விரிவாக ஆராயுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது எமது எதிர்காலம் தொடர்பானது. எனவே அனைவரும் இதுகுறித்து ஆராய வேண்டும்.
இது வரையில் நாம் சரியான பாதையில் பயணித்ததால் குறுகிய காலத்தில் இவ்வாறான முன்னேற்றத்தை அடைய முடிந்தது. தற்போது நாம் அடைந்துள்ள சாத்தியமான பெறுபேறுகளினால் நாட்டிற்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
கடன் செலுத்தும் இயலுமை இல்லை என 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட பின்னர், எந்தவொரு வெளிநாடும் எமக்கு கடன் வழங்க முன்வரவில்லை. அவ்வாறான பின்னணியில் அவர்களால் சட்டபூர்வமாக கடன் வழங்கவும் முடியாது. இந்தக் காலப்பகுதியில் நட்பு நாடுகள் என்ற வகையில், இந்தியாவும், பங்களாதேசும் குறுகிய கால கடன் உதவிகளை வழங்கின.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பல வழிகளில் சலுகைக் கடன்களைப் பெற்றுத் தந்தன. அதுதவிர வேறெந்த நாட்டிற்கும் நீண்ட கால கடன்களை வழங்க முடியாத நிலை இருந்தது. சில அரசியல் குழுக்கள் எமது வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்பி வருகின்றன.
அநுரகுமார திஸாநாயக்க எம்.பியின் ஆதரவாளர்களின் பதிவொன்றைப் பார்த்தேன்.
‘நற்செய்தி. கிழவன் நாட்டைப் பொறுப்பேற்கும் போது வெளிநாட்டுக் கடன் 71 பில்லியன். தற்போது 100 பில்லியன் டொலர்’
அநுரகுமார திஸாநாயக்க அவர்களுடன் நான் வாதப் பிரதிவாதங்கள் செய்திருக்கிறேன். முட்டி மோதியுள்ளேன். எனினும், அவரை இவ்வாறான கீழ்தரமாக விமர்சிக்கவில்லை. எனினும், அவரின் சில ஆதரவாளர்கள் அவரையும் சீரழிக்க முயற்சிக்கின்றனர். இந்தப் பதிவை மேற்கோள்காட்டியே அதுதொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துகிறேன்.
எமது மொத்த வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்களாகும். ஆனால், இது தொடர்பில் பதிவிட்ட நபர் 71 பில்லியன் டொலர்கள் என பொய்யான தகவலை குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கடந்த இரண்டு வருடங்களில் 100 பில்லியன் டொலர்கள் வரை கடன்களைப் பெற்றுக்கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார். ஆனால், கடனை திரும்பிச் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு நாடும் எமக்கு கடன் வழங்கவில்லை என்பது அனைவரும் அறிந்தவிடயமாகும். எந்தவொரு நாட்டிற்கும் எமக்கு கடன் வழங்குவதற்கான சட்டபூர்வமான அனுமதி இருக்கவில்லை. இவ்வாறான பொய்களை சமூகமயப்படுத்துவதால் இவர்கள் எதனை எதிர்பார்க்கின்றனர்?
எந்தவொரு நாடும் எமக்கு கடன் வழங்கவில்லையெனில், நாம் எவ்வாறு கடன் பெற முடியும். நான் இங்கிலாந்து மத்திய வங்கியைக் கொள்ளையிடுவதா என்ற கேள்வியை இவர்களிடம் கேட்க விரும்புகிறேன். பதிவிட்ட அந்த நபர், என்னைவிட மத்திய வங்கியைக் கொள்ளையிட்டதில் அனுபவம் பெற்றிருக்கிறார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் இரு தரப்புக் கடன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள், பெரிஸ் கழகம், சீன எக்ஸிம் வங்கி ஆகிய தரப்பினரிடம் இருந்து மீண்டும் கடன் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
அதேபோல், வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிக்கவும் முடியும்.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது நாடு என பெயரிடப்பட்டதாலும் அந்தந்த நாடுகள் நிதி வழங்கியதை இடைநிறுத்தியதாலும் எமது அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. விசேடமாக கட்டுமானப் பணிகள் அனைத்தையும் மீள ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கட்டுமானத்துறையில் மிகப் பெரிய பாய்ச்சலாகும். அதனால் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிட்டும். தற்போது கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளையும் நிறைவுசெய்ய முடியும். வெளிநாட்டு வேலைத் திட்டங்கள் இடைநடுவில் நின்றுபோனதால், எமது பொருளாதார வளர்ச்சி குறைந்தது. ஆனால் தற்போது நாம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளோம். மீண்டும் உலக நாடுகளின் நிதியுதவியுடன் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் போது அபிவிருத்திகளை மேலும் துரிதப்படுத்த முடியும்.
வெளிநாட்டு கடன்கள் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்படும் பொய்கள் தொடர்பாக சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றினால் தனியாக இயங்க முடியாது. தனியாக இயங்கும் வகையில் வருமானத்தை நாம் ஈட்டவும் இல்லை.
அதனால், நாம் கடன்களையும், நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடும். ஆனால் நாளாந்தம் உணவுத் தேவைக்காகவும், சம்பளம் வழங்கவும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சுதந்திரத்தின் பின் எமது நாடு செய்த பெரும் பிழை இதுவாகும்.
சம்பளத்தை அதிகரிக்க கடன்களைப் பயன்படுத்தினோம். அரச தொழில் வழங்க கடன்களைப் பயன்படுத்தினோம். இலவசமாக உணவுகளை வழங்க கடன்களைப் பயன்படுத்தினோம். உணவு, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றை குறைந்த செலவில் வழங்குவதற்காகவும் கடன்களைப் பயன்படுத்தினோம். அரச சேவைகளின் நட்டத்தை ஈடுசெய்ய கடன்களைப் பயன்படுத்தினோம்.
இவை எதனையும் செய்யாமல் எம்மால் அஸ்வெசும நிவாரணம் வழங்க முடிந்தது. பயனாளிகளை அதிகரிக்க முடிந்தது. தலா 10 கிலோ அரிசையை இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்க முடிந்தது. வீட்டுரிமையை வழங்க முடிந்தது. காணி உறுதிகளை வழங்க முடிந்தது. வெளிநாட்டு கடன் பெறாமல் இவை அனைத்தையும் நாம் செய்திருக்கிறோம்.
சில அரசியல் குழுக்கள், ஆட்சிக்கு வந்தவுடன் சம்பளத்தை அதிகரிப்போம் என்று கூறுகின்றனர். வரியைக் குறைப்போம், சலுகைகளை வழங்குவோம் என்று ஆயிரக் கணக்கான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஆனால் அதற்கான பணத்தை எப்படி திரட்டப்போகிறார்கள் என்பது தொடர்பில் ஒருவார்த்தைக் கூட பேசுவதில்லை. ஆனால் நான் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர் பல அரசாங்கங்கள் செய்த தவறுகளை நிறுத்தினேன்.
அடுத்ததாக வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் காரணமாக, எமக்குக் கிடைத்த பலன்கள் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
2022ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த மொத்தத் தேசிய உற்பத்தியில் 9.2 வீதத்தை செலவிட வேண்டியிருந்தது. 2027 முதல் 2032ஆம் ஆண்டு வரையில் அந்தத் தொகையை 4.5 வீதமாக குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மொத்த நிதித் தேவை மொத்த தேசிய உற்பத்தியில் 34.4 வீதமாக இருந்தது. 2027ஆம் ஆண்டு முதல் 2032ஆம் ஆண்டு வரையில் இதனை 13 சதவீதமாக பேண வேண்டும். அதனால், அரச சேவைகளுக்காக பெருமளவு நிதியை ஒதுக்குவதற்கான வாய்ப்பு கிட்டும். அதேபோல் உள்நாட்டு வட்டி வீதத்தை மேலும் குறைக்க வாய்ப்பு கிட்டும்.
பாதாளத்தில் விழுந்து கிடந்த எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கட்சி, பேதமின்றி ஒத்துழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தேன்.
நீண்டகாலமாக அரசியலில் எனக்கெதிராக செயல்பட்டவர்கள் கூட, நாட்டின் நலனுக்காக இந்தப் பணியில் என்னுடன் நேரடியாகவே கைக்கோர்த்துக் கொண்டனர். இன்னும் சிலர் அமைதியாக ஒத்துழைப்பு வழங்குகின்றனர். மற்றும் சிலர் தொடர்ச்சியாக இடையூறு செய்தனர். தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உடனடியாக ஐ.எம்.எப்.ஐ நாட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டை எதிர்க்கட்சியின் சில தரப்பினர் புறக்கணித்த போதும், தனியொரு எம்.பி.யாக அதில் பங்கேற்றேன். எனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்தேன். ஐ.எம்.எப். உதவிகளைப் பெறுவது மட்டுமே எமக்கான ஒரே வழியாகும் என்பதைக் கூறியிருந்தேன்.
அதிலிருந்து பல மாதங்களின் பின்னர் விழுந்து கிடந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப யாரும் முன்வராத சந்தர்ப்பத்தில் நான் இதனை ஏற்றுக்கொண்டேன். அந்த பாரதூரமான சவாலை எனது நாட்டுக்காகவே ஏற்றுக் கொண்டேன். இலங்கை அன்னையை ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து எவ்வாறாவது மீட்டு வருவேன் என சபதமெடுத்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அனைத்து மக்களும் இந்த வேலைத் திட்டத்திற்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன்.
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐ.எம்.எப். உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். எம்மை விமர்சித்தவர்கள் ஒருபோதும் ஐ.எம்.எப். பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்று கூறினர். ஆனால் இந்தப் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தோம். அப்போது எம்மை விமர்சித்தவர்கள் தடத்தை மாற்றிக் கொண்டனர். ஐ.எம்.எப். ஒத்துழைப்புடன் முன்னேறிய எந்தவொரு நாடும் இல்லை என்று கூறினார்கள். தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஐ.எம்.எப் இணக்கப்பாடுகளை புறக்கணிப்பதாக கூறுகின்றனர். ஆனால் நாம் வெற்றிகரமாக முன்நோக்கிச் சென்றோம். விமர்சகர்கள் மீண்டும் தடத்தை மாற்றிக் கொண்டனர்.
ஐ.எம்.எப். நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று சிலர் சில அறிக்கைகளை மேற்கோள்காட்டி கூறிவந்தனர். எமது வேலைத் திட்டம் சாத்தியமற்றது என்றும் கூறினர். முதலாவது தவணை கிடைத்தாலும், இரண்டாவது தவணைக் கிடைக்காது என்று கூறினர். ஆனால் எமக்கு இரண்டாவது தவணையும் கிடைத்துவிட்டது. அப்போது மறுபடியும் விமர்சித்தவர்கள் தடத்தை மாற்றினர். ஐ.எம்.எப். நிபந்தனைகளில் சிலவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் போனதாக சில மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறியிருந்தன. அதனால் மூன்றாம் தவணையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர். முழு நாட்டையும் அச்சத்தில் ஆழ்த்த முயற்சித்தனர். எனினும், மூன்றாவது தவணையையும் நாம் பெற்றுக்கொண்டோம். விமர்சகர்கள் மீண்டும் தமது தடத்தை மாற்றிக் கொண்டனர். மூன்று தவணைகளைப் பெற்றாலும் கடன் மறுசீரமைப்பு ஒருபோதும் வெற்றியளிக்காது என்று கூறினர். அதுமட்டுமன்றி, மறுசீரமைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டாம் என கடன் வழங்கிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் கடன் மறுசீரமைப்புப் பணிகளை நாம் வெற்றிகரமாக நிறைவுசெய்தோம். அப்போது மீண்டும் தடத்தை மாற்றிக் கொண்டார்கள்.
இப்போது கடன் தரப்படுத்தல்களில் இலங்கையின் நிலை மேம்படாமல் இருப்பதால் மறுசீரமைப்பில் பயனில்லை என்கின்றனர். அதனால் நாம் இப்போதும் வங்குரோத்து நாடு என்றும் கூறுகின்றனர். அதுபற்றியும் சில விடயங்களைக் கூற விரும்புகிறேன்.
2019ஆம் ஆண்டில் நாம் சர்வதேச தரப்படுத்தல்களில் B நிலையில் இருந்தோம். 2020ஆம் ஆண்டில் இலங்கை C தரத்திற்கு பின்தள்ளப்பட்டது.கடன் செலுத்த முடியாது என்று அறிவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே இது நடந்தது. அதனால், தரப்படுத்தல்களுக்காக வேறுபல காரணங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
இப்போது நாம் பல வெற்றிகளைக் கண்டுள்ளோம். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம். வெளிநாட்டு இரு தரப்பு கடன் மறுசீரமைப்பை நிறைவுசெய்துள்ளோம். வணிகக் கடன்களை மறுசீரமைக்கும் பணிகளை விரைவில் பூர்த்தி செய்ய முடியும். அவற்றையும் விரைவில் நிறைவுசெய்ய முடியும். இதனால், எமது பொருளாதார குறிகாட்டிகள் உயர்வடையும். எமது பொருளாதாரக் குறிகாட்டிகளை மையப்படுத்திய உரிய நேரத்தில் கடன் தரப்படுத்தல்களை மேம்படுத்த சர்வதேச நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும். அப்போதுதான் எமது விமர்சகர்கள் மீண்டும் தமது தடத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
அரசாங்கத்திற்கும் விமர்சகர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல் அரசாங்கத்திற்கும் வெட்டிப் பேச்சாளர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல் வாய்ச் சவடால் பேர்வழிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. நாம் நாட்டிற்காக சரியான கொள்கையுடன், சரியான பாதையில் பயணிக்கிறோம். அவர்கள் அதிகாரத்திற்காக நாளொன்றுக்கு ஒவ்வொன்றைக் கூறுகின்றனர்.
இதுகுறித்து கவனமாக அவதானிக்கும் தரப்பினரும் பாராளுமன்றத்தில் உள்ளனர். பல அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் இந்த விடயங்கள் குறித்து சுயாதீனமாகவும், கட்சி சாராமலும் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கட்சிக்காக அல்லது ஒரு தனிநபருக்காக செயல்படுவதா? அல்லது நாட்டிற்காக செயல்படுவதா? என்பது குறித்து கவனம் செலுத்துகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலை என்ன? அந்த நிலைமையை மறந்துவிட முடியுமா?
பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, சமூக, அரசியல் ரீதியாகவும் அந்த நிலைமை மாறி கடன் மறுசீரமைப்பு தொடர்பான நற்செய்தி வந்தபோது பலர் அதிருப்தியடைந்ததைக் காண முடிந்தது. மண்ணெண்ணெய் பட்ட சாரைப் பாம்பைப் போல நடந்துகொண்டனர். சமூக வலைத்தள மொழியில் கூறுவதாயின், உடம்பில் கம்பளி பூச்சு ஊர்ந்து செல்வது போல் இருந்தது. ஏன் அது?
ஐ.எம்.எப் வேலைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது நற்செய்தியா? துயரச் செய்தியா?
எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசைகளில் பல நாட்கள் இனி மேல் காத்திருக்க வேண்டியிருக்காது என்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?
30 வீதத்திற்கும் மேலாக இருந்த வங்கி வட்டி வீதம் 9 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா?
70 சதவீதத்திற்கும் மேலாகச் சென்ற பண வீக்கம் கடந்த மாத இறுதியில் 1.7 வரை குறைந்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?
தொடர்ச்சியாக 6 காலாண்டுகள் ஆட்டம் கண்ட எமது பொருளாதாரம், வளர ஆரம்பித்தது நற்செய்தியா? துயரச் செய்தியா?
2022ஆம் ஆண்டு மே மாதமளவில் அதளபாதளத்தில் வீழ்ந்து, வற்றிப் போயிருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு 5410 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?
ரூபா வலுவடைந்திருப்பது நற்செய்தியா? துயரச் செய்தியா?
அடிப்படை வைப்புக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா?
பணத்தை அச்சிடாமல், வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை நிவர்த்தி செய்வது நற்செய்தியா? துயரச் செய்தியா?
வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலுக்கான நடைமுறைக் கணக்கில் உபரி ஏற்பட்டது நற்செய்தியா? துயரச் செய்தியா?
காலிமுகத்திடல் மைதானத்தில் அடி வாங்காமல் செல்ல, சுதந்திரம் இல்லாதிருந்த கட்சித் தலைவர்களுக்கு, நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு வரை சென்று வர முடிந்துள்ளமை நற்செய்தியா? துயரச் செய்தியா?
பாராளுமன்றத்திற்கு வருவது மட்டுமன்றி வீடுகளில் கூட இருக்க முடியாமல் இருந்த நாட்டில் எந்த சந்தேகமும் அச்சமும் இன்றி வாழக்கூடிய நிலை உருவானது நற்செய்தியா? துயரச் செய்தியா?
நாடு நல்ல நிலையை அடைவது நற்செய்தியா? துயரச் செய்தியா?
இங்கிருந்து முன்னேறிச் செல்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி இதுவாகும். நற்செய்தியை எதிர்காலம் வரை கொண்டுசெல்வதற்கான ஒரே வழியும் இதுவாகும்.
கடந்த காலத்தில் நாம் பெற்ற வெற்றிகள் ஊடாக அது மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொங்கு பாலத்தின் கஷ்டமான பயணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் திரும்பிவர முடியாது. மீண்டும் வேறு வழியில் திரும்பிச் செல்ல முற்பட்டால், ஓரிரு மாதங்களுக்குள் மீண்டும் வரி யுகத்திற்குச் செல்ல நேரிடும். மிகப் பெரிய ஆபத்திற்குள் நாடு தள்ளப்படும். 25 – 30 வருடங்களுக்கு மீட்டெடுக்க முடியாத நிலைக்குள் நாடு தள்ளப்படும்.
ஹுனுவட்டயே கதையில் வரும் குருஷா, குழந்தையைத் தூக்கிக் கொண்டு தொங்கு பாலத்தைக் கடக்கத் தீர்மானித்தார். அந்த நேரத்தில் மாற்று வழிகள் இருக்கவில்லை. அப்போது குருஷாவின் அருகில் இருந்த ஒருவர், ”சாகப் போகிறாரா? அடிவாரம் தெரிகிறதா? பாதாள உலகத்தைப் போல் இருக்கிறது.” என்று கேட்டார்.
ஆனால் குருஷா, சவால்மிகு தீர்மானத்தை எடுத்தார். அவர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எப்படியாவது தொங்கு பாலத்தைக் கடந்தார். ஆனால் குருஷா தொங்கு பாலத்தில் இருந்து விழுந்துவிடுவார் என்று பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் அவர், குழந்தையுடன் வெற்றிகரமாக பாலத்தைக் கடந்தார்.
”அவர் விழுவார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கோபத்தோடு கூறினார். இவ்வாறு பிற்போக்கு சிந்தனைக் கொண்டவர்களும் சமூகத்தில் இருக்கின்றனர். நாட்டிற்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமாறு நான் அவர்களிடம் கோருகிறேன்.
விழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பவது குறித்து சிந்திப்போம். அதற்காக பாடுபடுவோம்.
நான் விரும்பும், விரும்பாத, என்னை மதிக்கும், மதிக்காத இந்த சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் நாட்டைப் பற்றி சிந்தியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அரசியல் அதிகாரத்திற்காகவோ, அரசியல் பிரசித்தத்திற்காகவோ நான் தீர்மானங்களை எடுப்பதில்லை. நாட்டிற்காகவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவுமே நான் தீர்மானங்களை எடுக்கிறேன். கடந்த இரண்டு வருடங்கள் நான் அரசியல் செய்யவில்லை. அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காக தீர்மானங்களை எடுக்கவில்லை.
இந்த பாராளுமன்றத்தில் என்னைப் போன்று நாட்டை நேசிக்கும் பலர் உள்ளனர். தமது தனிப்பட்ட தேவைகளைவிடவும், நாட்டின் நலன் குறித்து சிந்திக்கும் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியுடன் இணைந்துகொள்ளுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நற்பணியில் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மீண்டும் அழைக்கிறேன்.