முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை வழங்கும் பிரதேச செயலகத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த இரண்டு வேலைத்திட்டங்களினாலும் இந்நாட்டின் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி, விவசாயிகளை முன்னேற்றுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக்கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பயனாளிகளில், அடையாள ரீதியில் 600 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) முற்பகல் வெல்லவாயவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்தும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, கண்டி இராச்சியத்திற்கு அரிசி வழங்கிய வெல்லஸ்ஸ 1818 ஆம் ஆண்டு போரின் பின்னர் அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பின்னர், பல்வேறு அரசாங்கங்களின் கீழ் இந்த மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும் மக்களுக்கு காணி உரிமை கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டுக்கு அரிசி வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும், உடவலவ, மொனராகலை, அம்பாறை மற்றும் மகாவலி சி வலயத்தை ஒன்றிணைத்து உலர் வலயத்தில் பாரிய விவசாய வலயமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட மக்களுக்கு உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பின்னர் மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தகவல்களை கேட்டறிந்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.