ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 29.06.2024 பிற்பகல் கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயத்திற்குச் சென்று அதன் அபிவிருத்தி பணிகள் குறித்த நேரில் ஆராய்ந்தார்.
கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயம் பெருமளவான கிறிஸ்தவ மக்கள் வரும் தளமாக காணப்படுவதோடு, இதன் திருவிழா காலத்திலும் நாடளாவிய ரீதியிலிருந்து இலட்சக்கணக்கிலான மக்கள் வருகை தருவர்.
தேவாலயத்தின் சுற்று வட்டாரத்தில் நிறையும் தண்ணீரை அருகிலுள்ள வயலுக்கு அனுப்புவதற்கான திட்டம் குறித்த கோரிக்கைகள் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்காக 6 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக 02 இலட்சம் ரூபாய் காசோளையினை ஜனாதிபதி தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் லலித் எக்ஸ்பெடிடஸிடம் வழங்கி வைத்தார்.
அதேபோல் தேவாலயத்திலிருந்து நீர்கொழும்பு வரையிலான பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதோடு, அதனை மறுசீரமைத்து தருமாறு நீண்ட காலம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவ்விடத்திலேேய போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீதியை விரைவில் மறுசீரமைத்து கொடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
அதேபோல் நீர்க்கொழும்பு வலய கிறிஸ்தவ பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் குறித்து பாதிரியார்களிடம் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, கிறிஸ்தவ பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்த சென். செபஸ்தியன் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்த மக்களோடும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
கிறிஸ்தவ பாடசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி அயிவன் பெரேரா உள்ளிட்ட பாதிரியார்களும் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.