முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 28.06.2024 கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது புத்தகத்தின் முதல் பிரதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதனையடுத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.
இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
“பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிக்கொண்ட அதேநேரம் அதற்கு வெளியில் அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்திருந்தார்.
யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை நான் அறிந்துகொண்டேன். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்னோடு சமீபமாக பழகியவர். இந்த அதிகாரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு சிசில் வைத்தியரத்ன கூறினார். யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன். அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது. அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர். அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன். அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது.
உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம். மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்.
அதேபோல் சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அதன்போது அவர் தனிமைப்பட்ட வேளைகளிலும், சிறையிடப்பட்ட வேளையிலும் வலுவான மனிதராக உருவாகினார். அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அதற்கு தகுதியானவர் என்ற வகையில் அவரும் ஏற்றுக்கொண்டார்.
அரசாங்கம் என்ற வகையில் சரத் பொன்சேகாவின் தெரிவை கொண்டு நாம் பயனடைந்தோம். அவர் போராட்ட குணம் கொண்டவர். யுத்த களத்திலும் அரசியல் களத்திலும் போராட்டத்தை கைவிடவில்லை. அவரால் நாட்டுக்கு இனியும் சேவையாற்ற முடியும். அவரின் சேவைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். “Old soldiers never die they fade away.In this instance he wont fade away either, so he is still there.” என்ற வகையில் எதிர்காலத்தில் அவரிடத்திலிருந்து பெறக்கூடிய சேவையை பெற்றுக்கொள்ள நாட்டுக்கு சந்தர்ப்பம் கிட்டுமென நான் நம்புகிறேன்.
தற்போது நாட்டுக்குள் யுத்தம் முடிந்துவிட்டது சமாதானத்துக்கான பணிகளை செய்வோம் என்று சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு முறை கூறினார். அதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன். எமது இராணுவம் அனுபவங்கள் நிறைந்து. நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த இவர்களால் முடியும்.” என்றும் தெரிவித்தார்.