இஸ்மதுல் றஹுமான்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி கட்சியின் இரண்டாவது மக்கள் பேரணி 29 ம் திகதி மாலை மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய நகரில் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
“நாட்டிற்கு வெற்றி – ஒன்றிணைந்து பயணிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவினால் வெல்லவாய மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நிமல் லான்சா மேலும் கூறுகையில் “புதிய கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியின் வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான எம்.பி.க்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணி தலைமையிலான ஏனைய கட்சிகள், பாரிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு சிவில் அமைப்புக்கள் இப்புதிய கூட்டணியை நோக்கி அணி திரளத் தயாராகி வருகின்றனர்.” என்றார்.
இந்த மக்கள் பேரணி நிகழ்வில், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சுசில் பிரேமஜயந்த, நளின் பெனாண்டோ, அநுர பிரியதர்ஷன யாபா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட புதிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற , மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற முன்னால் உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்