சுகயீன விடுமுறையை அறிவித்து 27.06.2024 நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26.06.2024 ஆசிரியர் – அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் கற்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், பாடசாலைகளுக்கு வந்த சில மாணவர்கள் பாடசாலைகளுக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அனைத்து அரச பாடசாலைகளும் 27.06.2024 வழமைப் போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் மதிப்பீடு தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ளப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் 28.06.2024 முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதிவாளர் நாயக திணைக்கள அதிகாரிகளும் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நாடளாவிய ரீதியில் காணி பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பதிவாளர் சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தருணத்தில் நாட்டுக்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.