சுஐப் எம்.காசிம்-
அடையாளங்களை சாதனையாக்கி அல்லது சாதனைகளை அடையாளங்களாக்கி வளரும் அரசியல் மரபிலிருந்து முஸ்லிம் தனித்துவம் விடுபடுவதில்லை. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியும் இந்த மரபிலிருந்துதான் ஆரம்பமாகியது. அஷ்ரபின் ஆளுமைகளால் பல தனித்துவ அடையாளங்கள் வெல்லப்பட்டதே வரலாறு. தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் மற்றும் பாராளுமன்ற வெட்டுப்புள்ளி என்பவை இவற்றுள் பிரதானமானவை. சரிவுக்கு உட்படுகின்றபோது அல்லது கட்சி, சவாலை எதிர்கொள்கின்ற வேளைகளில் இந்த அடையாளங்களைக் காட்டி உணர்ச்சியைத் தூண்டும் அரசியல் அஷ்ரபுக்கு கை கொடுத்தே வந்தது. சமூகத்தின் மொத்த வியாபாரமா? அல்லது சில்லறை அபிவிருத்திகளா? சிந்தித்து வாக்களியுங்கள் என்பார் அஷ்ரப்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது நான்கு எம்.பிக்களில் ஒருவரான ஹிஸ்புல்லாவும் இதே பாணியில் வளரவே ஆசைப்பட்டார். இச்சிந்தனைக்கு அஷ்ரபின் பாசறைதான் பயிற்சியளித்திருக்கும். ஆனால், அஷ்ரபின் ஆளுமைக்குள் ஹிஸ்புல்லாவால் இலங்க முடிந்ததில்லை. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர், தனி வழி அரசியலில் பயணித்த ஹிஸ்புல்லாவும் முஸ்லிம் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் அழியாத அடையாளங்களுக்கு முயற்சிக்கிறார். இந்த அடிப்படையில், காத்தான்குடியில் முஸ்லிம்களின் வரலாற்றுப் பூர்வீகத்தை சித்தரிக்கும் முஸ்லிம் நூதனசாலையை ஸ்தாபித்தும், மஸ்ஜிதுல் அல் அக்ஸாவின் சாயலில் பள்ளிவாசலை நிர்மாணித்தும் பிரதேச அரசியலில் நிலைப்பவர் இவர்.
இதற்கும் ஒருபடி மேல் சென்று உலமாக்கள் கல்லூரியை ஸ்தாபிக்க முற்பட்ட ஹிஸ்புல்லா, ரிதிதென்னையில் நிர்மாணப்பணிகளைத் துவக்கி வைத்தார். சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் தாராளமாக நிதியுதவி வழங்கியதால், 2012இல் ஆரம்பமான இதன் பணிகள், 2018இல் முடிவடைந்து கல்லூரியைத் திறக்கும் கட்டத்தை நெருங்கியது. இத்தறுவாயில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் ஹிஸ்புல்லாவின் சகல ஸ்திரங்களையும் தவிடுபொடியாக்கியது.
மதவாதம் இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கருதப்பட்டதே காரணம். உலமாக்கள் கல்லூரியில் “ஜிஹாத்” அடிப்படைவாதப் போர்ப்பயிற்சி போதிக்கப்படுவதாக, பேரினவாதம் போர்க்கொடி தூக்கியது. நான்கு பக்கமும் சல்லடைகளாக வந்துகொண்டிருந்த விமர்சனங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இன்னல்களுக்கு ஹிஸ்புல்லா தனியாக நின்று போராடும் நிலையே அன்றிருந்தது. உலமாக்கள் கல்லூரியை மதகுருமார் கல்லூரியாக மாற்றுவதாகக் கூறினார். பேரினவாதம் விடவில்லை. இன வீதாசாரங்களுக்கேற்ப சகல சமூக மாணவர்களுக்கும் கணினிக் கற்கைகள் உள்ளிட்ட தொழில் கல்வி போதிக்கப்படுமென சமத்துவம் போதித்தார். ஆனால், இவற்றில் எதுவுமே எடுபடவில்லை. இவருக்காக குரல்கொடுக்கும் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாகக் காட்டப்பட்டதால், ஹிஸ்புல்லாவின் பக்கமிருந்த நியாயங்கள் ஊமையர்கள் கண்ட கனவுகளாகின.
உண்மையில், அன்று தனியாக நின்று நியாயங்களை எடுத்துரைத்த, சட்ட ரீதியில் போராடிய ஹிஸ்புல்லாவின் ஆளுமைகள் இன்றைய முஸ்லிம் தலைவர்களின் ஆளுமைகளுடன் புடம்போட்டுப் பார்க்கப்பட வேண்டியவை. இன்று கள நிலைமைகள் மாறி காட்சிகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இக்கல்லூரி மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் வந்துள்ளது.
பாதுக்கையிலுள்ள எஸ்.எல்.ரீ(SLT) பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படவுள்ளது இந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa campus). மலேஷியா, ஹொங்கொங், சிங்கப்பூர் போன்று பல்கலைக்கழகத்திலேயே தொழிற்கல்வியையும் போதிக்கின்ற பல்கலைக்கழகமாக இது மிளிரப்போகிறது.
இந்நிலையில்தான், அண்மையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஹிஸ்புல்லா இணைந்திருந்தார். சமூகத்தில் தனித்துவிடப்படுவதாக உணர்ந்ததால் இவர் இம்முடிவுக்கு வந்திருக்கலாம். இது, “சக்கரைப்பந்தலிலே தேன்மாரி பொழிந்ததுபோல” ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாய்த்துள்ளது. அஷ்ரபுக்குப் பின்னர் இக்கட்சியின் வளர்ச்சியும் எழுச்சியும் இப்படித்தான் பிறரது செல்வாக்கால் தூக்கிப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறான உள்ளூர்ச் செல்வாக்குகளை கட்சிக்குள் ஈர்த்தெடுக்கும் ஹக்கீமின் ஆளுமையும் அளவிடற்கரியதல்ல.