கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்து கடல்சார் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நிதி வலயமாக கொழும்பு துறைமுக நகரத்தை கட்டமைப்பதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குள் தொழில் நிறுவனங்களின் அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடுகளை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான ‘DigiEcon’ உலக முதலீட்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ‘DigiEcon’ உலக முதலீட்டு மாநாடு ‘இலங்கையின் இதுவரை பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் 25.06.2024 ஆரம்பமானது.
ஆரம்ப அமர்வின் பின்னர், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இந்த மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் IFS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் மொபட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.