உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 22.06.2024 முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார்.
தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை ஜனாதிபதி அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனும் இச்சத்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டனர்.