இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் 20.06.2024 நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற 31 ஆவது ‘அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் – 2024’, இந்தியாவின் KPMG மற்றும் இலங்கையின் KPMG ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட இந்திய பங்காளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Yezdi Nagporawalla மற்றும் KPMG இலங்கை முகாமையாளர் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினர்.