இஸ்மதுல் றஹுமான்
கோக்கேன் போதைப் பொருளை விழுங்கி வந்த வெளிநாட்டுப் பெண் விளக்கமறியல் கைதியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.
இவ்வாறு மரணமானவர் கென்யா நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஆவர்.
நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா 19ம் திகதி நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று உடலை பார்வையிட்டு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக பிரேத பரிசோதனை நடாத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்குமாறும் விசாரணையின் பின்னர் பூதவுடலை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் நீர்கொழும்பு பொலிஸாருக்கு உத்தரவிடடார். மேலும் நீர்கொழும்பு, பெரியமுல்லை முஸ்லிம் பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கும் அனுமதி வழங்கியதுடன் அவரது உடமைகளை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் கட்டளையிட்டார்.
20 ம் திகதி வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம். பிரனாந்து முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரியவந்ததாவது இப் பெண் 800 கிராம் கொக்கேன் போதைப் பொருளை விழுங்கி வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கடந்த ஏப்ரல் 26ம் திகதி கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் பல்வேறு நோய் நிலமைகள் ஏற்பட்டதாகவும் மே மாதம் 14ம் திகதி அவர் மரணமடைந்ததா அறிவிக்கப்பட்டது. நியுமோனிய நோய் ஏற்பட்டதினால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரண விசாரணையை நடாத்த உறவினர்கள் எவரும் வராததினால் தூதரக அதிகாரி மற்றும் மொழிபெயர்ப்பாளர் முன்னிலையில் 20ம் திகதி வியாழக்கிழமை இந்த விசாரணை இடம் பெற்றது.
வியாழக்கிழமை மாலை பூதவுடல் பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொலிஸ் சார்ஜன் (35402) ரன்துன் விசாரணையை நெறிப்படுத்தினார்.