நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல துறைசார் அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக விரைவாக காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 20.06.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்,
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உறுமய திட்டத்தின் கீழ் பெருமளவான காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்ததை விரைவுபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 26 – 30 திகதி வரையில் இந்த நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது காணி உறுதிகளை மக்களுக்கு வழங்குதற்காக சகல அதிகாரிகளும் நடமாடும் சேவையில் பங்கெடுப்பர். உறுதியை பெற்றுக்கொள்ள வருவோர் அவர்களின் பழைய உறுதிகள் அல்லது அனுமதி பத்திரங்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைப்பதை மாத்திரமே செய்ய வேண்டும். ஏனைய அளவையியல் பணிகள், பதிவுச் செயற்பாடுகள் என்பவற்றை அதிகாரிகள் முன்னெடுப்பர். இந்த சேவையுடன் பதிவாளர் திணைக்களம், அளவையியல் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்துகொள்வர். இதற்காக சிறிதும் பணம் அறவிடப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சமன் படிகோரல,
மகாவலி வலயத்திற்குள் வசிக்கும் 280,000 அதிகமானோர் காணி அனுமதிப் பத்திரங்களை கொண்டுள்ளனர். மகாவலி வலயத்திற்குள் வசிப்போரின் காணிகளுக்கான நிரந்தர உறுதிகள், உறுமய திட்டத்தின் கீழ் வழங்கப்படும். தற்போதும் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
காணி ஆணையாளர் நாயகம் பந்துல சமரசிங்க,
உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு இது குறித்த தகவல் உரிய வகையில் சென்றடையவில்லை. சிலர் தமது அனுமதிப் பத்திரங்களை வீடுகளுக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் நிரந்தர உறுதியை பெறுவதற்கான வாய்ப்பை இழக்கிறார்கள்.
அதனால் தமது பிரதேச செயலாளரிடம் காணி அனுமதிப் பத்திரங்களை கையளித்து மிக விரைவில் எவ்வித நிபந்தனைகளும் இன்றி காணி உறுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
அந்தப் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அலுவலகம், காணி ஆணையாளர் திணைக்களம், மகாவலி அதிகார சபை, அளவையியல் திணைக்களம், பதிவாளர் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து அனைத்து பிரதேச சபை மற்றும் கிராம சேவகர் பிரிவுகளில் இந்த நடமாடும் சேவையை நடத்தவுள்ளது.
அதற்காக பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கிராமங்களுக்கு வருகை தருவர். அதன்போது காணி அனுமதிப் பத்திரங்களை கையளித்து ரசீது ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உறுமய திட்டத்தின் கீழ் காணிகளுக்கான உறுதிகளை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மஹேந்திர அபயகுணவர்தன, அளவையியல் திணைக்களத்தின் மேலதிகள் பணிப்பாளர் கே.ஆர்.சரத் உள்ளிட்ட பலரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.