முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினது அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் 19.06.2024 இணைந்து கொண்டார்.
காலி மஹிந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர் தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக அரசியலில் பிரவேசித்த இவர் காலி மேயராகவும் தெரிவானார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட அவர் மீண்டும் காலி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
லயனல் பிரேமசிறி அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் ஊடாக காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பிற்பாடு அரசியல் கருத்து முரண்பாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட அவர், 2007 – 2010 காலகட்டத்தில் சமூக சேவைகள் பிரதி அமைச்சராக பணியாற்றினார். கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகராகவும் இவர் சில காலம் பணியாற்றியுள்ளார்.