“கந்துகர தசகய” பத்து சிறப்பு ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 97 பிரதேச செயலகங்களில் 14,088 வேலைத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக இவ்வருடம் 9,622 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்யானந்த தெரிவித்தார்.
மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் தேவைகளில் 89 வீதமானவை 2023 இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமான மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தில் இதுவரை 275,127 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் 19.06.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ்.சத்தியானந்த இவ்வாறு குறிப்பிட்டார்.
”நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் முக்கிய துறைகள் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் ஆகும். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு 151,662 வீடுகளை எமது அமைச்சு நிர்மாணித்துள்ளது.
உள்நாட்டு நிதிக்கு மேலதிகமாக, இந்திய உதவிகள், உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இதன்படி, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் வீட்டுத் தேவைகளில் 89% பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மொத்தமான மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின்படி, இதுவரை மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 275,127 ஆகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி இந்த ஆண்டு, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் வழங்கப்படும்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுநீரக நோயின் நிலைமையைக் கருத்தில் கொண்டு 50 நனோ நீர் சுத்திகரிப்பு பிரிவுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றும் பொறுப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கே உள்ளது.
23 மார்ச் 2028 ஆம் ஆண்டுக்குள், இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் 131,969 சதுர கிலோமீற்றர் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன், 25.09 சதுர கிலோமீற்றர் நிலக்கண்ணிவெடிகளே அகற்றப்படவேண்டி உள்ளன. அதற்காக இந்த வருடம் 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பல சிறப்புத் திட்டங்கள் நமது அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றன. மேல் மாகாண பெருநகர பிரதான திட்டம், கிழக்கு மாகாண மூலோபாய சுற்றுலா வலய அபிவிருத்திக்கான பிரதான திட்டம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் பிரதான அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தல், நிலைபேறான சுற்றுலா அபிவிருத்தி நகர அபிவிருத்தித் திட்டம், கொழும்பு நகர புத்துயிர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் திட்டம் மற்றும் அனுராதபுர ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டம் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.
மேலும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் கொழும்பு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவற்றில், ஜனாதிபதியின் விசேட கவனத்தைப் பெற்ற “கந்துகர தசகய” விசேட ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்காக இவ்வருடம் பத்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், 97 பிரதேச செயலகப் பிரிவுகளில் 14,088 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டங்களுக்காக 9,622 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.” என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ்.சத்தியானந்த தெரிவித்தார்.